Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரெயில் திட்டம்: 34 கி.மீ. உயர்மட்ட பாதை 2 நிறுவனங்களுக்கு டெண்டர்

செப்டம்பர் 08, 2021 01:26

சென்னை: சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் ரூ.63 ஆயிரத்து 843 கோடி செலவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 2-வது மெட்ரோ ரெயில் திட்டம் வடசென்னையையும், தெற்கு பகுதிகளான மடிப்பாக்கம், சோழிங்கநல்லூரையும் இணைக்கும் வகையில் நிறைவேற்றப்படுகிறது. கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் இடையே 26.1 கி.மீட்டர், மாதவரம்- சிறுசேரி இடையே 45.8 கி.மீ, மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீட்டர் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீட்டர் மெட்ரோ ரெயில் பாதையை விரைவாக முடிக்க 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 34.2 கி.மீட்டர் உயர்மட்ட பாதைக்கான டெண்டர் விடப்பட்டது. குறைந்த அளவில் டெண்டர் கோரப்பட்ட 2 நிறுவனங்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்த பணியை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது:-

குறைந்த விலை ஒப்பந்தம் கோரிய இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி மற்றும் எல்.அண்ட்.டி நிறுவனத்துக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் நிறுவனம் மாதவரம்- சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 11.6 கி.மீட்டர் தொலைவுக்கு உயர் மட்ட பாதை மற்றும் 11 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியை மேற்கொள்கிறது.

அதே வழித்தடத்தில் எல்.அண்ட்.டி நிறுவனம் 10.2 கி.மீட்டர் உயர் மட்ட பாதை மற்றும் 11 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியை மேற்கொள்கிறது. மற்றும் 12.4 கி.மீட்டர் பாதை தொலைவுக்கு உயர் மட்ட பாதை மற்றும் 12 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியை எல்.அண்ட்.டி. நிறுவனம் செய்கிறது. ரெயில் நிலையங்கள் கோயம்பேடு- இளங்கோ நகருக்கு இடையேயும், மேலும் முகலிவாக்கம்- புழுதிவாக்கம் இடையேயும் அமைகிறது. இந்த பணிகளை 3 ஆண்டுக்குள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்