Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழில் முனைவு பாடத் திட்டம் டெல்லி அரசு பள்ளிகளில் அறிமுகம்

செப்டம்பர் 08, 2021 02:08

டெல்லி: பள்ளி மாணவர்களை இளம் தொழில் முனைவோராக்கும் புதியபாடத் திட்டத்தை டெல்லி அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது. இப்பாடத் திட்டத்துக்கு ``பிசினஸ்பிளாஸ்டர்ஸ்'’ என பெயரிடப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத் தொடக்கவிழா டெல்லி தியாக்ராஜ் மைதானத்தில் நடைபெற்றது. பாடத் திட்டத்தை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடங்கி வைத்தார். இப்புதிய பாடத்திட்டம் டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களிடையே தொழில் முனைவை ஏற்படுத்தும் வகையில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளம் தொழில் முனைவோராக பள்ளி காலங்களிலேயே மாணவர்களை உருவாக்குவது நோக்கமாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டும் விதமாக இப்பாடத் திட்டம் அமையும் என்றும், இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் தொடக்க விழாவில் உரையாற்றும்போது சிசோடியா குறிப்பிட்டார்.

இப்பாடத் திட்டத்தின்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சொந்தத் தொழில் தொடங்க ரூ. 2 ஆயிரம் அளிக்கப்படும். இந்த மாணவர்கள் வேலை தேடி அலைய வேண்டியதில்லை. இவர்களாகவே வேலையை உருவாக்கிக் கொண்டு வாழ வழியேற்படுத்த வகை செய்வதுதான் இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று சிசோடியா குறிப்பிட்டார்.

இத்திட்டத்தை அதன் இலக்கைஎட்டும் வகையில் சரியாக செயல்படுத்தினால் வளரும் நாடு வரிசையிலிருந்து இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறும் என்று அவர் மேலும் சொன்னார். தான் பள்ளியில் பயின்றகாலத்தில் இந்தியா வளரும் நாடு என படித்ததையே தனது குழந்தைகளும் படிக்கின்றனர். இத்திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் போனால் நமது குழந்தைகளின் குழந்தைகளும் இதையேதான் படிக்க நேரிடும். இந்தியா வளரும் நாடாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதை சரியாக செயல்படுத்தினால் பாடப் புத்தகங்களில் வரலாற்றை மாற்றி எழுத முடியும். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக குறிப்பிடலாம் என்றும் சிசோடியா சுட்டிக்காட்டினார். சோதனை முயற்சியாக இத்திட்டம் கிச்ரிபூர் பகுதியில் உள்ள பள்ளியில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் தொழில் முனைவு கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கம்.

இதன்படி மொத்தம் 41 மாணவர்கள் கொண்ட 9 குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.1,000 அளிக்கப்பட்டது. அவர்கள் அதன் மூலம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்