Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் பணிகளுக்கு எல் அண்டு டி நிறுவனம் தேர்வு

செப்டம்பர் 09, 2021 01:35

சென்னை: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. தூர மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள எல் அண்டு டி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

சுரங்கம் தோண்டுவது, ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள கட்டுமான நிறுவனங்களை தேர்வு செய்து, அதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை அமைக்க எல் அண்டு டி நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 10.2 கி.மீட்டர் தூரம் உயர்மட்டத்தில் அமைக்கப்படும்.

அசிசி நகர் - சிஎம்பிடி (கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்) இடையே இந்த வழித்தடத்தில் ஒரு ரயில் நிலையம் பூமிக்கடியிலும், 11 ரயில் நிலையங்கள் உயர்மட்டத்திலும் அமைக்கப்படும். இதேபோல், சிஎம்பிடியில் இருந்து சாய்நகர், இளங்கோ நகர், முகலிவாக்கம், டிஎல்எப், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், பட்ரோடு, ஆலந்தூர், ஆதம்பாக்கம் வழியாக புழுதிவாக்கம் வரையில் சுமார் 12.43 கி.மீ. தூரத்துக்கான பாதை உயர்மட்ட பாதையாகவும் 12 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக எல் அண்டு டி நிறுவனம் தரப்பில் கூறும்போது, ‘‘சென்னையில் அடுத்தகட்டமாக நடக்கும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் பல்வேறு பிரிவுகளில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்வதற்கான பணி ஆணையை பெற்றுள்ளோம். மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ளவும், சிஎம்பிடி - புழுதிவாக்கம் இடையே மெட்ரோ ரயில்களை மேற்கொள்ளவும் பணி ஆணையை பெற்றுள்ளோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.

தலைப்புச்செய்திகள்