Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தானில் சோதனை முயற்சியாக சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் ரக விமானத்தை சாலையில் தரையிறக்கி சாதனை

செப்டம்பர் 10, 2021 11:15

ராஜஸ்தான்: ராஜஸ்தானின் தேசிய நெடுஞ்சாலையில் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை சோதனை முறையில் தரையிறக்கி விமானப்படை சாதனை படைத்தது. அதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, விமானப்படை தளபதி பதாரியா பயணித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள 925-ஏ தேசிய நெடுஞ்சாலையில், பாரத்மாலா திட்டத்தின் கீழ் சட்டா-காந்தவ் இடையே அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது 3 கிலோமீட்டர் நீளம் மற்றும் 33 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. போர் காலங்களில் இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் அவசரமாக தரை யிறங்குவதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரு புறமும் விமானங்களை நிறுத்தவும் முடியும்.

இந்த அவசர கால தரையிறங்குதளத்தில் விமானப் படைக்குசொந்தமான சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் நேற்று சோதனை முறையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா ஆகியோர் பயணித்தனர்.

பின்னர் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம் மற்றும் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவையும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசும்போது, “இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். நெடுஞ்சாலையில் இதுவரை கார்கள், லாரிகள், பஸ்களை பார்த்திருக்கிறோம். இனி விமானங்களையும் பார்க்க லாம். இந்த வசதி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த இடம் 1971-ல் (பாகிஸ்தானுடன்) போரை சந்தித்தது. இந்த இடத்துக்கு அருகில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. நாட் டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பதை உறுதி செய்வதாக இந்த அவசர கால தரையிறங்கும் தளம் அமைந்துள்ளது. போர் மட்டுமல்ல, இயற்கைப் பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த வசதி உதவும்” என்றார்.

இந்திய விமானப்படை விமானங்களை அவசரமாக தரையிறக்கும் வசதி படைத்த நாட்டின் முதல் தேசிய நெடுஞ்சாலையாக இது இருக்கும். விமானப்படையால் ‘போர்ஸ் மல்டிபிளையர்’ என அழைக்கப்படும் இது, அதன் மேற்குப் படையின் திறனுக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது.

இந்த தளத்துக்கு அருகே குந்தன்புரா, சிங்கானியா மற்றும்பக்சார் கிராமங்களில் 3 ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்