Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயிலில் கிடந்த ‘ஏர் பிஸ்டல்’ துப்பாக்கி- போலீஸார் கைப்பற்றி விசாரணை

செப்டம்பர் 12, 2021 11:35

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டி மாரியம்மன் கோயிலில் உறையுடன்கூடிய ஒரு துப்பாக்கி கிடப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று துப்பாக்கியைக் கைப்பற்றி பார்வை யிட்டனர். மேலும் கைரேகை பதிவு நிபுணர் வீரபிரதீப், தடய அறிவியல் உதவி இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அங்குசென்று துப்பாக்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

மேலும், ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, ஆன்லைனில் விற்கப்படும் ‘ஏர் பிஸ்டல்' ரக துப்பாக்கி என தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘பால்ரஸ், பிளாஸ்டிக் குண்டுகளைக் கொண்டு சுடக்கூடிய இதுபோன்ற ஏர் பிஸ்டல்கள் ஆன்லைனில் ரூ.300-ல் இருந்தே கிடைக்கிறது. பார்ப்பதற்கு உண்மையானது போலவே தோற்ற மளிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கும், பறவைகள் வேட்டைக்கும் இதனை சிலர் பயன்படுத்துகின்றனர். 10 முதல் 15 மீட்டர் தூரத்துக்கு அதிலிருந்து குண்டுகள் வெளியேறும். இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது அல்ல. எனவே, அந்த துப்பாக்கியைக் கைப்பற்றி கேட்பாரற்ற பொருள் என்ற பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் இதை கோயிலில் விட்டுச் சென்றவர் யார்? கோயிலில் போட்டுச் சென்றது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

தலைப்புச்செய்திகள்