Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் அருகே தமிழகத்தை சேர்ந்த தந்தை, மகன் மீட்பு

செப்டம்பர் 12, 2021 12:10

புதுடெல்லி: டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் அருகில் ஒரு வாரமாக காரில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த தந்தை, மகனைப் போலீஸார் மீட்டுள்ளனர். டெல்லியில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் வசிக்கும் ‘லுட்சியன்ஸ்’ என்றழைக்கப்படும் பகுதி மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. இங்கு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அலுவலகமும் உள்ளது. இதற்கு அருகில் ஒரு வாரமாக காரிலேயே வசித்த தந்தை, மகனைப் போலீஸார் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் நேற்று கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக வாடகை இன்னோவா காரில் 40 வயது மதிக்கத்தக்க தந்தையும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். பல நாட்களாக ஒரே இடத்தில் கார் நிற்பதை பார்த்து, அதில் இருந்தவரிடம் விசாரித்தோம். அப்போது, தந்தை, மகன் இருவரும் தமிழகத்தைச் சேர்தவர்கள் என்று கூறினர். மேலும், தன்னை ஒரு விஞ்ஞானி என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் இருவரும் அமெரிக்காவுக்கு சென்றதாகவும், அங்கு அவர்களுடைய உடலில் ‘மைக்ரோசிப்’களை யாரோ ஒருவர் பொருத்தி உள்ளதாகவும், அது தொடர்பாகவும் அமெரிக்காவுடனான இந்திய உறவு குறித்தும் புகார் தெரிவிக்க டெல்லி வந்ததாகவும் அவர் கூறினார். அவர்கள் இருவரும் மனநலம் குன்றியவர்கள் போல் காணப்படுகின்றனர்.

மேலும், இருவரும் காரில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்தே இருந்தனர். இதுகுறித்து கேட்டதற்கு, ‘ஹெல்மெட்டை கழற்றிவிட்டால், தங்கள் உடலில் இருந்து அதிர்வலைகள் ஏற்படுவதாக கூறினர். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இருவருடைய மனநலம் குறித்தும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான் தூதரகம் அருகில் உள்ள பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தி இருந்தனர். அதை ஒரு வாரமாக கவனிக்காத போலீஸ் அதிகாரி நர்சி ராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு போலீஸார் கூறினர்.

தலைப்புச்செய்திகள்