Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாணியம்பாடியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கொலை: காஞ்சிபுரம் அருகே இருவர் கைது; 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு

செப்டம்பர் 12, 2021 12:12

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(42). மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த இவர், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜீவா நகர் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு அவ் வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, வசீம் அக்ரம் கொலையில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காரில் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் வசீம் அக்ரம் கொலையில் தொடர்புடைய 6 பேரில் 2 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (எ) ரவி (28) மற்றும் டெல்லிகுமார் (24) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசார ணையில், வாணியம்பாடியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் என்பவர் சொன்னதின் பேரில் வசீம் அக்ரமை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வந்த காரில் ரத்தக்கரை படிந்த கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

வசீம்அக்ரம் கொலை செய் யப்பட்டதை தொடர்ந்து வாணியம்பாடியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு தலைமையில், 2 மாவட்ட காவல் கண்காணிப்பாளர், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 15 காவல் ஆய்வாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வாணியம்பாடி முக்கிய பகுதிகளில் நேற்று பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வாணியம்பாடி சி.எல்.சாலை, பேருந்து நிலையம், நியூடவுன், பஜார் மற்றும் புதூர் பகுதியில் உள்ள கடைகள் நேற்று மூடப்பட் டன. தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்