Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு

செப்டம்பர் 19, 2021 09:02

பஞ்சாப்: பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியில் சில மாதங்களாகவே புயல் வீசிக் கொண்டிருந்தது. மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் தவறாகக் கையாண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 5 மாதங்களே உள்ள நிலையில் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனியை கட்சித் தலைமை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால், 'ஒரு சீக்கியரே பஞ்சாப் முதல்வராக இருக்க வேண்டும்' என்று அம்பிகா சோனி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இதன் பின்னரே புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முழுப் பொறுப்பையும் தலைவர் சோனியா காந்தி மாநில காங்கிரஸ் கட்சியிடமே விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உத்தரவை அடுத்து அடுத்து தங்கள் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காக, சண்டிகரில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று காலை முதலே சண்டிகர் நகரில் இக்கூட்டம் நடைபெற்று வந்தது. பிற்பகலில் சுக்ஜிந்தர் சிங் முதல்வராக்கப்படுவார் எனவும் தகவல்கள் கசிந்தன.

எனினும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் தொடர்ந்தது. கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான சரண்ஜித் சிங் சன்னிக்குக் கட்சி உறுப்பினர்களிடையே ஒருமித்த ஆதரவு கிடைத்தது. இதனை அடுத்து சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சி தனது புதிய சட்டப்பேரவைத் தலைவரை அறிவித்தது.

பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பஞ்சாப் விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரிஷ் ராவத் தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்