Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டா மாற்றம் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம்- கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது

செப்டம்பர் 25, 2021 10:38

மதுரை: மதுரை மாவட்டம் பனையூர் அய்யனார்புரத்தை சேர்ந்தவர் சோனை(வயது 44). இவருக்கும், இவரது சகோதரிக்கும் சொந்தமான இடங்கள் அந்த பகுதியில் உள்ளன. அவர்களின் 3 இடத்திற்கும் பட்டா பெயர் மாற்றத்திற்காக பனையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பம் பனையூர் கிராம நிர்வாக அலுவலர் சத்தியஜோதியிடம் (47) வந்துள்ளது. பட்டா மாற்றத்திற்காக சோனை, கிராம நிர்வாக அலுவலரை அணுகினார். அப்போது அவர் ஒவ்வொரு இடத்திற்கும் பட்டா பெயர் மாற்ற தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும், பணம் கொடுக்காவிட்டால் பட்டா மாற்றம் செய்ய முடியாது என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சோனை, இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதில், சத்தியஜோதி பட்டா மாற்ற 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது உறுதியானது. எனவே கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி சோனையிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து சோனை நேற்று மதியம் பனையூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கிராம நிர்வாக அலுவலர் சத்தியஜோதியை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய 9 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்து நின்றிருந்த லஞ்ச போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், குமரகுரு, அம்புரோஸ், ரமேஷ் மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்