Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கி கணக்கே இல்லை- கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்

செப்டம்பர் 25, 2021 06:28

பாட்னா: பீகார் மாநிலம் சிசானி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி விபின் சவுகான். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கணக்கு தொடங்க விரும்பினார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பதாக தெரியவந்தது.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சேர வந்த கூலி தொழிலாளி பெயரில் வங்கி கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு திகைத்தார். முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்க விரும்பிய தனக்கே தெரியாமல் தன்னுடைய பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அதில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டு சவுகானும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சவுகான் தெரிவித்தார். சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கி கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை. ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சவுகான் புகார் அளித்ததும் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்