Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் ரூ.7,523 கோடியில் 118 அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கிகள் தயாரிப்பு: பணி ஆணை வழங்கியது பாதுகாப்புத் துறை

செப்டம்பர் 26, 2021 11:05

சென்னை: ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில், ரூ.7,523 கோடி மதிப்பில் 118 அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கி வாகனங்களைத் தயாரித்து வழங்குவதற்கான பணி ஆணையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. நவீன பீரங்கி வாகனமான எம்கே-1ஏ, அர்ஜுன் பீரங்கி வாகனத்தின் புதிய வகையாகும். எம்கே-1வகை பீரங்கி வாகனத்துடன் ஒப்பிடும்போது 72 புதிய அம்சங்கள் மற்றும் உள்நாட்டு உபகரணங்களும், எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் பீரங்கி வாகனம், அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாக செல்லும் திறன் பெற்றது. அதோடு, பகலிலும், இரவிலும், துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இந்த பீரங்கி வாகனத்தை, பல மேம்பட்ட வசதிகளுடன் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இதனால் இந்த பீரங்கி வாகனம், உலகத் தரத்துக்கு இணையாக இருக்கும்.

இந்நிலையில், அர்ஜுன் எம்கே.-1ஏ பீரங்கிகளைத் தயாரிக்கும் பணி ஆவடி கனரக தொழிற்சாலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குறு, சிறு தொழில்நிறுவனங்கள் உட்பட 200 இந்திய நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த வாகனத்தை, போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ), டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்களுடன் இணைந்து 2 ஆண்டுக்குள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்