Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விரைவில் புதிய கூட்டுறவு கொள்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

செப்டம்பர் 26, 2021 11:12

புதுடெல்லி: கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கூட்டுறவுகொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.  இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், மாநிலங்களில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கொள்கை இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது உள்ள 65 ஆயிரம் முதன்மை வேளாண் கூட்டுறவு அமைப்புகளின் (பிசிஏ) எண்ணிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3 லட்சமாக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கூட்டுறவு அமைப்புக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். மத்திய கூட்டுறவு அமைச்சகம் இந்த ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது என்று கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் 2,100 பிரதிநிதிகள் பங்கேற்றனர். காணொளி வாயிலாக இக்கூட்டத்தில் 6 கோடி பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

கூட்டுறவு அமைப்பு மாநிலங்கள் சார்ந்த விஷயம் என்று பலர் கருதுகின்றனர். இதில்மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்ற ஆச்சர்யமும் பலருக்கு மேலோங்கியுள்ளது. ஆனால் சட்ட ரீதியில் மத்திய அரசுக்கும் இதில் பங்குள்ளது. அது குறித்து விரிவாக பேசுவது இப்போது தேவையற்றது. மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும், இதில் உரசலுக்கு வாய்ப்பே இல்லை. மாநில அரசுகளின் கூட்டுறவு கொள்கைக்கு ஏற்றவாறு கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். மத்திய கூட்டுறவு அமைச்சகம் அதற்காக உருவாக்கப்பட்டுள்ளதோடு இதை நவீனப்படுத்துவதுதான் நோக்கம்.

2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒருங்கிணைந்த புதிய கூட்டுறவு கொள்கையை பரிந்துரைத்தார். அதனடிப்படையில் அதை செயல்படுத்துவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சிகள் எடுக்கும். முந்தைய கால கட்டங்களை விட தற்போதுதான் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான அவசியம்ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவு அமைப்புகள் மிகச் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். நாட்டை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு கணிசமாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களுக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டுறவு அமைப்புகளை சிதைக்கும் வகையில் நியாயமற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்