Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.26 கோடி மோசடி தொடர்பாக கே.எப்.ஜே ஜுவல்லரியின் நிர்வாகிகள் 2 பேர் கைது

செப்டம்பர் 27, 2021 10:16

சென்னை: சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கே.எப்.ஜே என்ற பெயரில் நகைக்கடை இருந்தது. இந்த நகைக்கடையின் மேலாண் இயக்குநராக சுஜித் செரியன், இயக்குநர்களாக அவரது மனைவி தான்யா, சகோதரர் சுனில் செரியன் ஆகியோர் இருந்தனர்.

இந்நிறுவனம் பல்வேறு பெயர்களில் தங்க நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்தது. அதன்மூலம், பொதுமக்களிடம் இருந்து பழைய தங்க நகைகளையும், பணத்தையும் வாங்கிக் கொண்டது. ஆனால், நகைச்சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தையோ, தங்கத்தையே திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்தன.

அதைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கே.எப்.ஜே ஜுவல்லரி மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. இந்த புகார்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டன.

1,689 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி ரூ.26 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கே.எப்.ஜே ஜுவல்லரி நிர்வாகிகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டு கடந்த நிலையில் இந்த நகைக்கடையின் மேலாண் இயக்குநரான சுஜித் செரியன், இயக்குநரான அவரது தம்பி சுனில் செரியன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்