Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமங்கலம் அருகே தனியார் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

செப்டம்பர் 28, 2021 10:13

மதுரை: திருமங்கலம் அருகே தனியார் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே புளியங்குளத்தில் தனியார் நிலத்தில் முட்செடிகளை அகற்றும்போது பழமையான பானை ஓடுகள் இருப்பதாக முருகேசன் என்பவர் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரன் அங்கு ஆய்வு செய்தார். அப்போது, 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்குக் கழிவுகள், சிறிய கற்கருவிகள் மற்றும் கல்வட்டம் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது:

புளியங்குளத்தில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் புதைந்துள்ளன. மேற்பரப்பில் கருப்பு-சிவப்பு நிற பானை ஓடுகள், தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய், தெய்வம் போன்ற குறியீடுகள் உள்ளன.

பெருங்கற்காலத்தின் தொடக் கத்தில் இறந்தோரின் உடலைத் காட்டுப்பகுதிகளில் வீசி விலங்குகளுக்கு இரையாக்குவர். மிஞ்சும் எலும்புகளைச் சேகரித்து பயன்படுத்திய மண்பானைகளில் தானியங்களை உள்ளே வைத்து மூடி ‘வி’ வடிவக் குழிக்குள் அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில்தான் இறந்தோரை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து, தாழியைச் சுற்றி கல் அடுக்குகள் வைத்துள்ளனர். இங்கு 2 ஏக்கர் பரப்பளவுள்ள இடுகாட்டிலிருந்து 500 மீ தொலைவில் வாழ்விடமும் காணப்படுகிறது. இங்கு கல்மேடு, கருப்பு- சிவப்பு பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள் காணப்படுகின்றன.

மண் தோன்றிய காலத்திலேயே தமிழன் தோன்றியதாகச் சொல்லப்பட்டாலும், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வில் கண்டெடுத்த பொருட்களின் அடிப்படையில் சங்க காலத் தமிழர்களின் கல்வி, நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு அறியப்படுகிறது. அதேபோல், புளியங்குளம் பகுதியிலும் அகழாய்வு செய்தால் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்