Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தானில் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு: காலணியில் புளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக 40 பேர் கைது

செப்டம்பர் 28, 2021 10:16

ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி நுழைவுத்தேர்வு (ஆர்இஇடி) எழுத காலணியில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானிலுள்ள அரசுபள்ளிகளில் ஆசிரியர்களை தேர்வுசெய்ய ஆர்இஇடி தேர்வு நடத்தப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்புநடந்த இந்தத் தேர்வை எழுத16.51 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையத்துக்கு வந்த சிலர் வித்தியாசமான முறையில் காலணி அணிந்திருந்ததால் அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது காலணிகளில்ப்ளூடூத் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஆஜ்மீர் போலீஸ் அதிகாரி ரத்தன்லால் பார்கவ் கூறும்போது, “ப்ளூடூத் காலணியில் ஒரு காலிங் டிவைஸ் உள்ளது. அதிலிருந்து யாராவது ஒருவரை தொடர்பு கொண்டால் அவருக்கு அந்த வினாத்தாள் சென்றுவிடும். அவர் சரியான பதில்களை தெரிவிப்பார். இது தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் கேட்கும். அந்த சாதனம் மிகச் சிறியதாக இருக்கும் என்பதால் நம் கண்களுக்கு தெரியாது. இந்ததொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் மோசடியில் ஈடுபட முயன் றனர். பிகானீர், ஆஜ்மீர் பகுதியில்இதுபோன்ற மோசடி நடந்தது தெரியவந்ததும் மற்ற மாவட்டங்களின் அதிகாரிகளையும் நாங்கள் உஷார்படுத்தினோம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

ஆஜ்மீரை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சந்திர சர்மா கூறும்போது, “அடுத்த முறை தேர்வுநடக்கும்போது காலணிகள், ஷூக்கள், கால் உறைகள் அணிந்துவரஅனுமதிக்க மாட்டோம். இந்த ப்ளூடுத் காலணிகளின் விலை ரூ.6 லட்சம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 40 பேரை கைது செய்துள்ளோம். 24 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த ப்ளூடூத் காலணிகளை உருவாக்கியவர், தேர்வுக்காக பயிற்சி அளிக்கும் மையத்தின் உரிமையாளர் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திகள்