Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

செப்டம்பர் 29, 2021 10:01

கோவை: குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருமணம் செய்ய குறைந்தபட்சம் ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் திருமண வயதை அடையும் முன்பே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது அதிகரித்து உள்ளது.

குறிப்பாக மதுக்கரை, காரமடை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் குழந்தை திருமண ஏற்பாடுகள் அதிகம் நடப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன. இதற்கு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட குடும்ப சூழலே காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு 53 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு 78 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதில், சூலூரில் மட்டும் 14 திருமண நிகழ்ச்சிகள் தடுக்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 88 குழந்தை திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் 66 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. சில நேரங்களில் குழந்தை திருமணம் முடிந்த பிறகு கிடைத்த தகவல் காரணமாக இதுவரை 22 வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பு வாழ்க்கை சூழ்நிலைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதில், வேலையிழப்பு, வறுமை உள்ளிட்ட சில காரணங்களால் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதில் உறவினர்களுக்குள் நடக்கும் குழந்தை திருமணங்கள் சில நேரங்களில் தெரிவதில்லை. எனவே குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது போல் நேற்று காரமடையில் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது, குழந்தை திருமணங்கள் சட்டப்படி குற்றம் என்பது கூட பலருக்கு தெரிவதில்லை. எனவே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் தொடர்பாக 181 என்ற தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்