Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

அக்டோபர் 02, 2021 04:58

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொலைபேசி வாயிலாக பக்தர்களின் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜவஹர் ரெட்டி கலந்துகொண்டு பதிலளித்தார். திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும்.

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் அவர்கள் 3 நாட்களுக்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனைக்கான நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வரும் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 11-ந்தேதி கருடசேவை நடக்கிறது. அன்று ஆந்திர அரசு சார்பில் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கிறார்.

அன்று திருப்பதி அலிபிரி மலைப்பாதை, கன்னடம் மற்றும் இந்தி தொலைக்காட்சி சேனல் தொடக்க விழா, பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி, கோ மந்திரம், 22-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கடந்த 25-ந்தேதி முதல் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் கவுண்டர்களில் வழங்கப்பட்ட இலவச தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டது.

இலவச தரிசன டோக்கனை மீண்டும் நேரடியாக வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று முழுவதும் கட்டுக்குள் வந்த பின்னரே கவுண்டர்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது என்றார். நேற்று திருப்பதியில் 25,052 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,962 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.54 கோடி உண்டியல் வசூலானது.

தலைப்புச்செய்திகள்