Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பகலிரவு டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 377 ரன் எடுத்து டிக்ளேர்

அக்டோபர் 03, 2021 10:41

ஓவல்: இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் பாதிக்கப்பட்டு முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மந்தனா 80 ரன்னுடம், பூனம் ரவுத் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர் .

இரண்டாம் நாளில் சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். பூனம் ரவுத் 16 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். யஸ்திகா பாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். இந்திய அணி 101.5 ஓவரில் 276 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தீப்தி சர்மா 12 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய தீப்தி சர்மா அரை சதமடித்தார். அவர் 66 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா சார்பில் பெர்ரி, கேம்ப்பெல், மோலினக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா பெண்கள் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீராங்கனை மோனி 4 ரன்னிலும், அலீசா ஹீலி 29 ரன்னிலும், கேப்டன் மெக் லானிங் 38 ரன்னிலும், மெக்ராத் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா சார்பில் கோ ஸ்வாமி, பூஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தலைப்புச்செய்திகள்