Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகமாடிய பிளஸ்-2 மாணவர்

அக்டோபர் 03, 2021 10:44

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் மாணவர், அதே பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று பாடப்புத்தகம் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த மாணவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் மாணவரின் தாயின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அந்த மாணவர் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தன்னை பெண்ணாடம் புத்தர் தெரு அருகே உள்ள ஆர்ச் அருகில் காரில் வந்த முகம் தெரியாத 3 பேர் கடத்தி சென்று விட்டதாக கூறினார்.

மேலும் கடத்திச் சென்றவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடுகப்பாளையம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றபோது, காரை விட்டு இறங்கி அருகில் உள்ள பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து செல்போனை வாங்கி பேசுவதாகவும், சீக்கிரமாக வந்து தன்னை கூட்டிச் செல்லும் படியும் கூறினார். இதையடுத்து மாணவரின் பெற்றோர், காரில் சென்று வடுகப்பாளையத்தில் இருந்த மாணவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கடத்தப்பட்ட மாணவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மாணவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில் பள்ளி தேர்வுக்கு பயந்து மாணவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து மாணவரை நன்றாக படிக்கும்படி போலீசார் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் பெண்ணாடம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தலைப்புச்செய்திகள்