Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு தொடர்பு: போதை கடத்தல்

அக்டோபர் 05, 2021 11:25

மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற சொகுசு கப்பலில் போதை பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்திய 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்களில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் ஆவார். 8 பேரிடமும் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 8 பேரையும் வருகிற 7-ந் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அனுமதி பெற்றுள்ளனர். அதன்படி இன்று காலை ஆர்யன் கான் உள்பட 8 பேரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டது. அவர்களது செல்போனில் பதிவாகி இருந்த உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு 8 பேரும் அளித்த பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. வாக்கு மூலமாகவும் பெறப்பட்டது.

இதற்கிடையே ஆர்யன் கானின் வக்கீல் சதீஷ் கூறுகையில், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுவது போன்று ஆர்யன் கான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்கு முன்பு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. அவர் அனைத்து விசாரணைகளுக்கும் தயாராக இருக்கிறார்” என்று கூறி உள்ளார்.

ஆனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆர்யன்கான் மீது சந்தேகத்தை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கூறுகையில், “ஆர்யன் கானின் செல்போனில் பதிவாகி இருந்த தொடர்புகள் அனைத்தும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன. அடுத்தக்கட்ட விசாரணைகளில் தான் இது தொடர்பான தகவல்கள் தெரிய வரும்” என்றனர்.

தலைப்புச்செய்திகள்