Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

அக்டோபர் 08, 2021 01:02

சென்னை: தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதை கண்டித்தும், பக்தர்களை அனுமதிக்கக் கோரியும் பா.ஜனதா கட்சியினர் 12 முக்கிய இடங்களில் உள்ள கோவில்கள் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அண்ணாமலை பேசும்போது, “தமிழக அரசுக்கு 10 நாட்கள் கெடு விதிக்கிறோம். கோவில்களை திறக்க அரசு செவி சாய்க்கவில்லை என்றால் 10 நாட்களுக்கு பிறகு அரசு ஸ்தம்பித்து போகும் அளவுக்கு எங்கள் போராட்டம் அமையும்” என்றார்.

இந்த நிலையில் வடக்கு கடற்கரை போலீஸ் உதவி கமி‌ஷனர் கொடிலிங்கம் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் அண்ணாமலை உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

அனுமதியின்றி கூடுதல், நோய் தொற்று பரவும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்