Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக புதுவை ஆளுநர் செயல்படுகிறாரா?: அதிமுக கேள்வி

அக்டோபர் 10, 2021 05:26

புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக துணை நிலை ஆளுநர் செயல்படுகிறாரா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் இன்று(அக்.10) செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘இட ஒதுக்கீடு குளறுபடிகள் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கடந்த வாரம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை சாதகமாக்கிக்கொண்டு சத்திய சீலர்களின் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் உரிமைகளை தட்டிப்பறித்துள்ளது. இது பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து உரிமைகளையும் பறிக்கும்.

புதுச்சேரியின் நிர்வாகி, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலின் பேரிலேயே கடந்த 6-ம் தேதி இட ஒதுக்கீடு திரும்பப்பெறப்படுவதாக அரசின் சார்பு செயலர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இதனால் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் செயல்படுகிறாரா?

துணைநிலை ஆளுநருக்கு இந்த கோப்பை அனுப்பியது யார்? புதுச்சேரி அமைச்சரவையின் ஒப்புதலின்படி கோப்பு அனுப்பப்பட்டதா? இல்லை துறை அதிகாரிகள் இந்த கோப்பை அனுப்பினார்களா? தமிழ்மகளான துணைநிலை ஆளுநர் மீது புதுச்சேரி மக்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும், பாசமும் வைத்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நாடகம் நடத்தும், சத்திய சீலர்களின் அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி பலியாக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். புதுச்சேரியில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டம் நடத்தி, துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனால் புதுச்சேரி மக்களிடையே பதட்டம் நிலவுகிறது. மன நிம்மதியோடும், மகிழ்வோடும் கொண்டாட வேண்டிய பண்டிகை காலத்தை பீதியுடனும், அச்சத்துடனும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அமைதி பூங்காவான புதுச்சேரி பெரும் கலவரத்துக்கு காத்திருக்கும் அமானுஷ்ய சூழ்நிலையில் உள்ளது.

துணை நிலை ஆளுநருக்கு மக்களிடையே நிலவும் பீதியை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது. இதை உணர்ந்த இடஒதுக்கீடு அரசாணையை திரும்பப்பெறும் கோப்பை அனுப்பியது யார்? இதற்கு அனுமதி அளித்து இடஒதுக்கீடை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து துணைநிலை ஆளுநர் வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏற்கனவே உள்ளபடி பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடை ரத்து செய்யக்கூடாது என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.’’இவ்வாறு வையாபுரி மணிகண்டன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்