Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தல்:  நாளை ஓட்டு எண்ணிக்கை

அக்டோபர் 11, 2021 01:19

சென்னை: தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

இந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6-ந்தேதி, 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடந்தது. 9 மாவட்டங்களிலும் 145 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளும், 1,381 ஒன்றிய உறுப்பினர் பதவிகளும், 2,901 பஞ்சாயத்து தலைவர் பதவிகளும், 22,581 ஊராட்சி உறுப்பினர் பதவிகளும் உள்ளன.

இந்த பதவிகளுக்கான தேர்தலுடன் 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 130 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. 6-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9-ந்தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. பாராளுமன்றம், சட்டசபை தேர்தல் போல மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக தேர்தல் நடைபெறவில்லை.

பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 4 பதவிக்கும் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டு அச்சடித்து வழங்கப்பட்டு இருந்தது. அதில் வாக்காளர்கள் முத்திரை குத்தி ஒரே பெட்டியில் போட்டுள்ளனர். இந்த பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குச்சாவடி வாரியாக எண்கள் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாளை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக பெட்டிகள் உள்ள அறை சீல் உடைக்கப்பட்டு அங்கிருந்து ஓட்டு பெட்டிகளை பொதுக்கூடத்துக்கு எடுத்து வருவார்கள்.

முதலில் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் பெட்டியில் உள்ள ஓட்டுகள் பெரிய பெட்டி ஒன்றில் கொட்டப்படும். பின்னர் அதிலிருந்து 50-50 சீட்டுகளாக அடுக்கி வைத்து கட்டுவார்கள். இந்தப் பணி முடிந்ததும் அந்த கட்டுகள் இன்னொரு அறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு கட்டுகளை பிரித்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கான மஞ்சள் நிற ஓட்டுச்சீட்டு, ஒன்றிய உறுப்பினருக்கான பச்சை நிற சீட்டு, பஞ்சாயத்து தலைவருக்கான இளம் சிவப்பு நிற சீட்டு, பஞ்சாயத்து உறுப்பினருக்கான வெள்ளை நிற சீட்டு என தனித்தனியாக வண்ணம் வாரியாக பிரிப்பார்கள்.

பின்னர் பிரிக்கப்பட்ட சீட்டுகளை 50-50 ஆக பிரித்து மீண்டும் கட்டுவார்கள். ஒவ்வொரு மையத்திலும் 4 பதவிகளுக்கும் ஓட்டுகளை எண்ணுவதற்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு அந்த ஓட்டு சீட்டுக்கள் பதவிகள் வாரியாக கொண்டு செல்லப்படும். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் கிடைத்த ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெறும். ஒவ்வொரு கட்டுகளையும் பிரித்து அதில் யார்-யாருக்கு? ஓட்டு விழுந்து இருக்கிறது என்பதை பார்த்து வேட்பாளர் வாரியாக பிரித்து வைக்கப்படும். பின்னர் அவை எண்ணப்படும்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உறுப்பினர் பதவியை பொறுத்தவரை ஒவ்வொரு பதவிக்கும் 1 லட்சம் ஓட்டில் இருந்து 1½ லட்சம் ஓட்டு வரை இருக்கின்றன. எனவே அவற்றை எண்ணி முடித்து முடிவுகள் அறிவிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதே போல ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு பல ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. எனவே இந்த இரு பதவிகளுக்கான ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதற்கு நாளை பிற்பகல் ஆகி விடும். ஆகவே நாளை பிற்பகலுக்கு பிறகுதான் முன்னிலை நிலவரங்கள் தெரிய வரும். அதே நேரத்தில் பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஓட்டுக்கள் உள்ளன. எனவே ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய ஒருசில மணி நேரத்திலேயே அந்த முடிவுகள் தெரிய வரும்.

காலை 10 மணியளவில் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள் விவரம் தெரியவரும். அடுத்த ஒரு மணி நேரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களின் விவரங்களும் தெரியவரும். மொத்தம் 4 ஓட்டுகள் போட வேண்டும் என்பதால் வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவியது. 4 சீட்டுகளிலும் தனித்தனியாக இந்த ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும். ஆனால் விவரம் தெரியாமல் சிலர் ஒரே சீட்டில் 4 ஓட்டுகளையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

ஒன்றிரண்டு சீட்டுகளில் மட்டும் முத்திரை குத்தி விட்டு மற்ற சீட்டுகளை கையோடு எடுத்து சென்றவர்களும் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான செல்லாத ஓட்டுகள் பதிவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பல குழப்பங்களும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்காளர்கள் அதிகமாக உள்ள பஞ்சாயத்து உறுப்பினர்கள் இடங்களின் தேர்தல் முடிவுகள் மாலையில்தான் தெரிய வரும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஓட்டு எண்ணுவதை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்