Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

17 நாட்களாகத் தேடப்பட்டு வந்த டி.23 புலி: ஒம்பெட்டா வனப்பகுதியில் நடமாட்டம் கண்டறியப்பட்டது

அக்டோபர் 12, 2021 12:25

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் கூடலூரில் மனிதர்களைக் கொன்ற புலியைப் பிடிக்க 17 நாட்களாக வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக 'டி.23' எனக் கண்டறியப்பட்ட புலியின் நடமாட்டம் இல்லாததால், வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:

"சிங்காரா வனப்பகுதியில் 'டி.23' புலியின் நடமாட்டம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் இடங்களில் நவீன கேமராக்களைப் பொருத்தி கண்காணித்து வந்தோம். நேற்று கேமராக்களை சோதித்தபோது இரண்டு புலிகளின் உருவம் பதிவாகி இருந்தது. 

அவற்றின் உடலில் இருந்த வரிகளைப் பார்க்கும்போது அது 'டி.23' புலி அல்ல என உறுதி செய்யப்பட்டது.

மாயாறு பகுதிகளில் கொல்லப்பட்ட கால்நடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கேமரா பதிவுகளை சோதித்தபோது, எந்தப் புலியின் உருவமும் பதிவாகவில்லை. 

கடந்த 6-ம் தேதி 'டி.23' புலி காணப்பட்ட இடத்தைச் சுற்றி தேட நான்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே இரண்டு பேரைப் புலி கொன்ற வைல்டு பிரீஸ் ரிசார்ட்டுக்கு அருகே ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது".

இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியான ஒம்பெட்டா வனப்பகுதியில் 'டி.23' புலியின் நடமாட்டம் உள்ளது இன்று (அக். 12) அடையாளம் காணப்பட்டது.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. 

இதனால், புலியைப் பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்