Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேஜை அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடி: திமுக - அதிமுக வாக்குவாதம்;

அக்டோபர் 12, 2021 12:32

கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவி வாக்கு எண்ணிக்கை மையமான தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேஜை அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய 8-வது வார்டு உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சித் தலைவர், 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று 5 இடங்களில் நடைபெறுகிறது.

கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஏ.கண்ணையன், அதிமுக சார்பில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகியும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்று மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக இருந்து கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பதவியை ராஜினாமா செய்த தானேஷ் என்.முத்துகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பதிவான வாக்குகள் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எண்ணப்படுகின்றன. இதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்க இருந்த நிலையில், வாக்கு எண்ணும் மேஜைகள் நேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டவணைப்படி இல்லை என அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், தங்களிடம் இன்று வழங்கிய அட்டவணைப்படிதான் மேஜைகள் அமைக்க வேண்டும் என திமுக வலியுறுத்தி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதில் 8 ஊராட்சிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம் எனக்கூறி, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஒரு வாக்குச்சீட்டில் சின்னம் உள்ளிட்ட வேறு சில இடங்களில் மை இருந்ததால் சந்தேகத்தில் வைப்பதாகக் கூற அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொன்றில் இதேபோல இருக்க அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 10 நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குவிந்திருந்த திமுக, அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு அதிரடிப்படை போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அரை மணிநேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்