Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்போரூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணி: உணவு வழங்காததால் மயங்கி விழுந்த ஆசிரியர்கள்

அக்டோபர் 12, 2021 12:38

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பு செய்து மையத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

திருப்போரூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்குக் காலை உணவு வழங்காமல் தாமதித்ததால், வாக்கு எண்ணும் பணியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 22 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 50 ஊராட்சித் தலைவர் மற்றும் 381 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள், படூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு,

பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 12) நடைபெற்று வருகிறது. இதில், வாக்கு எண்ணும் பணிகளுக்காக 40 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிக்காகத் தயார் நிலையில் இருந்த ஆசிரியர்களுக்குக் காலை உணவு 9 மணி வரையில் வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டது. இதனால்,

ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இரண்டு ஆசிரியர்கள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தனர்.

அவர்களை அங்கிருந்த போலீஸார் மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் பணியைப் புறக்கணிப்பு செய்வதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.

இதனால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உடனடியாக உணவு தயார் செய்து வழங்கினர். இதையடுத்து, ஆசிரியர்கள் உணவு அருந்தினர்.

தலைப்புச்செய்திகள்