Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற கணவன்;

அக்டோபர் 12, 2021 01:29

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் எஸ்.குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உத்ரா (25) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மே 7-ம் தேதி வீட்டில் படுக்கை அறையில் நல்ல பாம்பு கடித்து உத்ரா இறந்து கிடந்தார். உத்ரா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, ஒரு முறை பாம்பு அவரைக் கடித்துள்ளது. ஆனால் அதில் அவர் பிழைத்துக் கொண்டார்.

இதனால் உத்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக கொல்லம் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவியைக் கொல்ல அவரது கணவர் சூரஜ்தான் நல்ல பாம்புவை வாங்கி வந்தார் என்பது தெரிய வந்தது.

திருமணத்தின் போது 100 சவரன் நகை, ரொக்கமாக ரூ.10 லட்சம், சொத்து, கார் என உத்ராவின் பெற்றோர், சூரஜுக்கு வரதட்சணை கொடுத்துள்ளனர்.

ஆனால் இந்தத் தொகை போதாது என உத்ராவை, அவ்வப்போது கொடுமைப்படுத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது.

கொல்லம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், சூரஜ் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு என்ன தண்டனை என்ற விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்