Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு; மரவள்ளி இலையை சாப்பிட்ட 60 செம்மறி ஆடுகள் பலி

அக்டோபர் 12, 2021 02:41

நெய்வேலி :

குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் சிவகங்கை மாவட்டம் பெருமச்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் முருகேஷ், வடிவேல் ஆகிய இருவரும் 800க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை  மேய்த்து கொண்டிருந்தனர். 

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் ஏரிக்கரையில் கிடந்த மரவள்ளி இலைகளை தின்றதால் திடீரென மயங்கி விழுந்தன. 

இதில் 60 செம்மறி ஆடுகள் இறந்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி கால்நடை மருத்துவர்கள் ராஜா, வித்யாசங்கர் ஆகியோரை உள்ளடக்கிய மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு சென்று மயங்கிக் கிடந்த செம்மரி ஆடுகளுக்கு சிகிச்சையளித்து 62க்கும் மேற்பட்ட ஆடுகளை உயிர்பிழைக்க செய்தனர்.

சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட கால்நடை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன் வந்து ஆடுகள் இறந்தது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.

 தொடர்ந்து கால்நடை நோய் புலனாய்வு துறை டாக்டர்கள் ராஜேஷ்குமார், சுந்தரம் ஆகியோர் வந்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்த மாதிரி, இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

இச்சம்பவத்தை பற்றி கால்நடை மருத்துவரை கேட்டபோது, ஆய்வுக்கு அனுப்பி ஆய்வு அறிக்கை வந்தவுடன்தான் ஆடுகள் மரவள்ளி இலை சாப்பிட்டு இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இறந்ததா என தெரியவரும் என தெரிவித்தனர். 

இச்சம்பவம் செம்மறி ஆடுகளின் உரிமையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்