Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை

அக்டோபர் 16, 2021 11:44

டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன், உடலில் காயங்கள் இருப்பதால் வெகுதூரம் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மைசூரு உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

லகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கிக் கொன்ற டி23 புலியை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

22 நாட்களாக தேடுதல் வேட்டைக்குப் பின் நேற்று பிற்பகல் மயக்க ஊசி செலுத்தப்பட்டு புலி பிடிபட்டது.

புலியைப் பிடித்தவுடன் அதை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுசெல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், புலியைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அதற்கு உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், மருத்துவக் குழு அறிவுறுத்தல்படி புலியை மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.

வனத்தில் 22 நாட்களாக டி23 புலியைப் பின்தொடர்ந்து தேடுதல் நடத்தியதால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருந்தது. பிற புலிகளுடன் சண்டையிட்டதால் காயங்கள் ஏற்பட்டு இருந்ததாலும் புலியை வெகுதூரம் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மைசூரு கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது டி 23 புலி மைசூரு உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் உள்ளது. அதற்கு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அங்கு, முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையில் புலிக்கு 9 காயங்கள் உள்ளது கண்டறியப்பட்டது. அதில் 4 காயங்கள் பிற புலிகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், இந்தக் காயங்களால் புலியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், வனத்துறை உயிர் அதிகாரிகள் புலியின் சிகிச்சையைக் கண்காணிக்க மைசூரு சென்றுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்