Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி

அக்டோபர் 16, 2021 12:22

தஞ்சாவூர்; மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே அற்புரதப்புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் விவசாயிகள் மின் இணைப்புக்காகப் பதிவு செய்து காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளின் நலன் கருதி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் 4,819 விவசாயிகள் இலவச மின் இணைப்பு திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். அதில் 287 விவசாயிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 262 விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்துக்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிக்கான மின் இணைப்பு என்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

1990-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் என்ற சிறப்பு திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டபோது 12.40 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர்.

அடுத்த 31 ஆண்டுகளில் 10.36 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவர். குறிப்பாக, 2010-11 ஒரே ஆண்டில், 77,158 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

அதற்கடுத்து கருணாநிதி வழியில், முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் நலனில், அக்கறை கொண்டு, இந்த ஆண்டு என்பதைவிட ஆறு மாத காலத்தில், மார்ச் மாதத்துக்குள் இந்த ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கக்கூடிய சிறப்பு திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்காக மாவட்டங்கள் தோறும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டு மின் இணைப்புக்குப் பதிவு செய்தவர்களுக்கு, தற்போதுதான் கிடைத்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய ஒரு திட்டம். தமிழகத்தில், ஓவர்லோடு மின்மாற்றிகள் 8,986 கண்டெடுக்கப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 696 இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 155 இடங்களில் பணி முடிந்துள்ளது. மீதி இருக்கக்கூடிய பணிகள் விரைவாக முடிக்கப்படும்.

தமிழகத்துக்கு, நிலக்கரி தேவை என்பது நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் டன். தற்போது நான்கு நாட்களுக்குத் தேவையான நிலக்கரி நம்மிடம் கையிருப்பு உள்ளது. அதனால் இப்போதைக்கு அந்த நிலக்கரி சம்பந்தப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. தேவையான அளவுக்கு மின்சார உற்பத்தியும் உள்ளது.

மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய அனல்மின் நிலையத்தில 4,320 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், கடந்த ஆட்சியில், வெறும் 1,800 மெகாவாட் அளவுக்குதான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, 3,500 மெகாவாட் அளவுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், பராமரிப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம்.

மற்ற மாநிலங்களில் நிலக்கரி பற்றக்குறை உள்ளது. ஆனால், தமிழகத்தில் அந்தப் பற்றாக்குறை இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

கடந்த ஆட்சியில் மின்மிகை மாநிலம் எனக் கூறப்பட்டது. ஆனால், 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு கேட்டுக் காத்திருந்தனர். அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. ஆனால், தற்போது அதனைக் கருத்தில் கொண்டு காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தொழிற்சாலைக்கு இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் அளவுக்குக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

 

தலைப்புச்செய்திகள்