Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க 6,000 போலீசார்

அக்டோபர் 24, 2021 01:23

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் பொது மக்கள் புத்தாடைகள் வாங்குவதற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் கடை வீதிகளில் குவிந்து வருகிறார்கள்.

இதற்காக கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீசார் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தி.நகர் உள்பட சென்னையில் உள்ள அனைத்து வணிக இடங்களிலும் சுமார் 6,000 போலீசாரை பாதுகாப்புக்காக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பாண்டிபஜாரில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுதொடர்பாக கூறும்போது, ‘‘தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் 5 ஆயிரம் 6 ஆயிரம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதுபோன்று இந்த ஆண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான வருகிற 31-ந் தேதியும் கூடுதல் பாதுகாப்பு போடவும் சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்களை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்கள் வணிகப்பகுதிகளாக திகழ்ந்த போதிலும் தி.நகரில்தான் மக்கள் அதிகளவில் பொருட்கள் வாங்குவதற்கு கூடுகிறார்கள். குறிப்பாக தீபாவளி புத்தாடைகளை வாங்குவதற்கு பெண்கள் அதிகளவில் தி.நகருக்கு செல்கிறார்கள்.

இதனால் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.நகர் ரங்கநாதன் தெருவில் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக திரளான மக்கள் திரண்டனர். இன்றும் அதேபோன்று கூட்டம் காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு கொள்ளையர்கள், பெண்களிடம் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது என்பதால் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாம்பலம் போலீசார் எடுத்துள்ளனர்.

தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரன்பிரசாத் உத்தரவின் பேரில், மாம்பலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரித்துள்ளனர். பெண்களின் கழுத்தில் அணிந்துள்ள செயினை பாதுகாக்கும் வகையில் சிறிய அளவிலான கவச உடை ஒன்றையும் போலீசார் தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டும் இந்த கவச உடை பயன்படுத்தப்பட்டது. ரங்கநாதன் தெருவுக்குள் பொருட்கள் வாங்க நுழையும் பெண்களை நிறுத்தி அவர்களின் கழுத்தில் அந்த கவச உடைகளை போலீசார் அணிவித்து விடுவார்கள்.

இதனை அணிந்த பிறகு பெண்களின் கழுத்தில் கிடக்கும் செயின் முழுமையாக மறைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் கூட்டநெரிசலில் செயின் பறிப்பை முழுமையாக கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர கூட்டத்துக்குள் நடந்து சென்றே சந்தேக நபர்களை கண்காணிப்பதற்காக சட்டை கேமராக்களும் பயன்படுத்தப்பட உள்ளது. தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தங்களது சட்டையில் கேமராக்களை பொருத்திக் கொண்டு சீருடையிலும், சாதாரண உடையிலும் கூட்டத்துக்குள் சென்று கண்காணித்து வருகிறார்கள்.

இதன் மூலம் சந்தேக நபர்கள் சுற்றித்திரிந்தால் அவர்களை எளிதாக பிடிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது. உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழுதான கேமராக்களை அகற்றிவிட்டு புதிதாக 40 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க 2 இடங்களில் போலீஸ் உதவி மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்த கண்காணிப்பு மையங்கள் திறக்கப்பட உள்ளன.

தலைப்புச்செய்திகள்