Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: டி.கே.சிவக்குமார்

நவம்பர் 03, 2021 10:03

பெங்களூரு: சட்டசபை இடைத்தேர்தல் முடிவு குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிந்தகியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், ஹனகல் தொகுதியில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளுக்கு தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் சிந்தகியில் பா.ஜனதாவும், ஹனகல் தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதியை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

கடந்த சட்டசபை தேர்தலில் சிந்தகியில் காங்கிரசுக்கு 3-வது இடம் தான் கிடைத்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவே சாட்சி. ஹனகல் தொகுதியில் சீனிவாஸ் மானே கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறை அவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. அத்துடன் ஹனகல் தொகுதி முதல்-மந்திரியின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் உள்ள எங்களின் நண்பர்கள் பைகளில் பணத்தை நிரப்பி கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தனர். ஆனாலும் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்