Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன அழுத்தத்தில் இருந்த  2 ஆயிரம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

நவம்பர் 06, 2021 04:24

சென்னை: நீட் தேர்வு எழுதி, மன அழுத்தத்தில் இருந்த 2 ஆயிரம் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு எழுதியவுடன் மாணவர்களின் மன உளைச்சலைப் போக்கும் வகையில் 333 மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதுவரை 21,756 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

முதல் இரு முறை பேசியபோது 2 ஆயிரம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தது கண்டறியப்பட்டு மீண்டும் மீண்டும் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு மரணம் மன வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கண்டிப்பாக இது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் உயிருக்கு நீங்கள்தான் முழு உத்தரவாதம். அவர்களுக்கு அழுத்தம் தராமல் இருப்பது பெற்றோர்களின் கடமை. கவுன்சிலிங்கின்போது பெற்றோர்கள் அழுத்தம் கொடுப்பதாக 5 ஆயிரம் மாணவர்கள் கூறியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளும் பெற்றோர்களை நினைத்துப் பார்த்து, வாழ்ந்து, சாதித்துக் காட்ட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்