Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெரியாறு அணை: கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

நவம்பர் 08, 2021 04:54

கூடலூர்: கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அணையின் நீர் மட்டம் 139 அடியை நெருங்கியபோது கடந்த மாதம் 29-ந் தேதி அணையை ஒட்டியுள்ள 6 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிக்கு 3800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
 
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரள அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 9 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழக அமைச்சர்கள் அணையை பார்வையிட்டு திரும்பிய பிறகு கேரள அரசு தனது கெடுபிடிகளை தளர்த்தி வருகிறது.

தற்போது கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2906 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நவம்பர் 10-ந் தேதி வரை 142 அடிக்குள் தேக்கி அதன் பின்னர் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்