Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டில் இன்னும் ஏன் ஊழல் முடிவுக்கு வரவில்லை?: பிரியங்கா 

நவம்பர் 08, 2021 05:04

புதுடில்லி: ‛‛மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நாட்டில் ஏன் இன்னும் ஊழல் ஒழியவில்லை?'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்தார். அதன்படி, இந்தியாவில் பழைய 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்த பிரதமர் மோடி, அடுத்த 50 நாட்களில் நாட்டில் ஊழல், பயங்கரவாதம், கள்ளநோட்டு ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், ரூ.1,000, ரூ.500 நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.2,000, ரூ.200 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகளும் புழக்கத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கள்ள நோட்டுகள் ஏதும் ரிசர்வ் வங்கிக்கு வரவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தன. மேலும், இந்த நடவடிக்கையால் மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர். லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் முதலீடு இல்லாமல் நசிந்து போயின. ஏராளமான மக்கள் வேலையிழந்தனர். இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

காங்., பொதுச்செயலர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியாக இருந்திருந்தால், நாட்டில் இன்னும் ஏன் ஊழல் முடிவுக்கு வரவில்லை? ஏன் கறுப்புப் பணம் நாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை? ஏன் இன்னும் பணமற்ற பொருளாதாரமாக மாறவில்லை? பயங்கரவாதம் இன்னும் ஏன் ஒழிக்கப்படவில்லை? பணவீக்கம் ஏன் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்