Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசை எதிர்த்துகேள்வி கேட்டால் தேசவிரோதி பட்டம்; இதுதான் பாஜக ஸ்டைல்: தெலங்கானா முதல்வர் காட்டம்

நவம்பர் 09, 2021 02:03

மத்திய அரசை குறிப்பிட்ட விஷயங்களில் எதிர்த்து எதிர்க் கேள்வி கேட்டால் கேட்பவருக்கு தேசவிரோதி என்று பட்டம் கொடுக்கப்படுகிறது என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று ஹைதராபாத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசை எதிர்த்து ஏதேனும் கேள்விகேட்டால், பதில் தேட முயன்றால், அவர்கள் மீது தேசவிரோதி என முத்திரையை குத்திவிடுகிறது மத்திய அரசு. இதுதான் பாஜகவின் ஸ்டைல். எப்போதும் பாஜகவின் இரண்டு அல்லது மூன்று முத்திரையை தயாராக வைத்திருப்பார்கள். அதில் முதலாவது தேசவிரோதி முத்திரை, 2-வதாக நகர்புற நக்சல் முத்திரை.

மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசினார், பாஜக எம்.பி. வருண் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, வேளாண் சட்டங்களை எதிர்த்தார். அப்படியென்றால் அவர்கள் தேசவிரோதிகளா. மேகாலயா ஆளுநர் தேசவிரோதியா. என்னை தேசவிரோதி என பாஜகவினர் கூறுகிறார்களே அப்படியென்றால் இவர்கள் இருவரும் யார்.

நம்முடைய எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிக்க முயல்கிறது என நான் தெரிவித்தேன். என்னை பாஜகவினர் தேசவிரோதி என முத்திரைகுத்துவீர்களா, நம்முடைய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கிறது என்று ஒருவர் கூறினாலே அவர் தேசவிரோதியா.

எங்கள் மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும், கொள்முதல் செய்ய முடியுமா அல்லது முடியாத என்ற பதிலையும் மத்தியஅரசிடம் இருந்து பாஜகதலைவர்கள் பெற்றுத்தரவேண்டும். தெலங்கானா விவாசயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாதவரை மத்திய அரசையும், பாஜகவினரையும் விடமாட்டோம்.

கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவினர் புறவாசல் வழியாக நுழைந்து ஆட்சியைப் பிடித்துள்ளார்கள். 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வென்று டெபாசிட்டை இழந்தது பாஜக. ஆனால் பாஜகவுக்கு எதிராகப் பேசுவோர், செயல்படுவோருக்கு எதிராகவும், மிரட்டவும் வருமானவரித்துறையையும், அமலாக்கப்பிரிவையும் மத்தியஅரசு ஏவிவிட்டு வழக்குத் தொடர்கிறது.

மற்றவர்களை மிரட்டியது போல் என்னை மிரட்டிப்பார்க்க முடியாது.நாங்கள் நேர்மையானவர்கள். தேவையில்லாத முயற்சிகளில் பாஜகவினர் ஈடுபடவேண்டாம். அது பூமாராங்காக உங்களுக்கு திரும்பிவரும். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால், ஆண்டுக்கு ஒரு கோடிபேர் வேலையிழந்து வருகிறார்கள். நாட்டிலேயே குறைவாக வேலையின்மை இருக்கும் மாநிலம் தெலங்கானாதான்.

இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்

தலைப்புச்செய்திகள்