Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது- இந்தியா உள்பட 8 நாடுகள் கூட்டு பிரகடனம்

நவம்பர் 11, 2021 10:51

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்பு பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியா அழைத்தும் அந்த நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த பேச்சுவார்த்தையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல் தொடங்கி வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட 8 நாடுகள் சேர்ந்து கூட்டு பிரகடனம் வெளியிட்டன. அதில், “ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுவதற்கு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி அளிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது” என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பெயரைக்குறிப்பிடாமல், ஆப்கானிஸ்தான் உள் விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடு கூடாது என்பதை 8 நாடுகளும் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலாவுடன் ரஷியா, ஈரான், 5 மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்