Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அவசியமின்றி மக்கள் வெளியில் வரவேண்டாம்; சென்னையில் தயார் நிலையில் மீட்புப் படை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

நவம்பர் 11, 2021 11:40

சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 3 பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். அவசியமின்றி பொதுமக்கள் யாரும் இன்று வெளியில் வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் வட கடலோரம், டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்படி, மாவட்ட ஆட்சி யர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு மழை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெற்பயிர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் பயிர் பாதிப்பை உடனடியாக கணக்கிடுமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் 53-ல் 76 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் 14,138 ஏரிகளில் 9,153 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 3,691 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பியுள்ளன. இவற்றை கண்காணிக்குமாறு நீர்வளம், உள்ளாட்சித் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை திரும்பியுள்ளன. மீனவர்கள் யாரும் தற்போது கடலுக்குள் இல்லை. இன்னும் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளாம்.

சென்னையில் தற்போது 1,343 பேர் 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 13.39 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள் ளன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 3,154 பேர், 100 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழை தொடர்பாக 7,180 புகார்கள் பெறப்பட்டு, 3,593 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் நோய்த் தொற்றை தவிர்க்கும் வகையில் 1,523 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 54,040 பேர் பயனடைந்துள் ளனர். நவ. 9-ம் தேதி (நேற்று) மட்டும் சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழைக்கு 3 பேர் உயிரிழந்துள்ளர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லலபுரம் - ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 3 பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளன. எனினும், பொதுமக்கள் அவசியமின்றி இன்று வெளியில் வரவேண்டாம்.

மழை குறைந்த பின்னர் பயிர்ச்சேதம் குறித்து கணக்கெடுக்கப் படும். தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியா வசிய அரசு ஊழியர்கள் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர் இருப்புக்கு ஏற்பவும், மழைப் பொழிவை பொறுத்தும் அணை, ஏரிகளில் தண்ணீர் திறக்கப்படும். இரவு நேரங்களில் தண்ணீர் திறக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் நீர்நிலைகளின் அருகில் நின்று செல்பி எடுக்க வேண்டாம். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

கனமழையின்போது மின்விநியோகம் பாதிக்காமல் இருப்பதற்காக 12 ஆயிரம் களப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டும் 4 ஆயிரம் களப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநிலம் முழுவதும் காவல் நிலைய அதிகாரிகள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல்படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை என 75 ஆயிரம் பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் சுவர் துளைக்கும் உபகரணங்களுடன் 250 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படையும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.

சிறு படகுகளுடன் 350 கடலோர காவல்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளைச் சரிசெய்ய 250 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை குழுவினரும் உள்ளனர். 10 மிதவை படகுகள் மற்றும் 364 பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

கனமழையின்போது பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் அவசர உதவிக்கு காவல்துறை 100, தீயணைப்புத் துறை 101, பொது எண் 112, அவசர ஊர்தி 108, காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-24343662, 044-24331074, 044-28447701, 044-28447703 (ஃபேக்ஸ்), சென்னை மாநகர காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண் 044-23452380 மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எண். 044-23452359 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்