Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் சாலையில் யாசகம் பெற்று நடனம் கற்று தேர்ந்த திருநங்கைக்கு பத்மஸ்ரீ விருது

நவம்பர் 12, 2021 11:24

கர்நாடகாவில் சாலையில் யாசகம்பெற்று நடன கலையில் கற்றுதேர்ந்ததற்காக பத்ம‌ஸ்ரீ விருது பெற்றுள்ள திருநங்கை மஞ்சம்மா ஜோகதிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது

கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக நாட்டுப்புற நடன கலைஞர் மஞ்சம்மா ஜோகதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பத்ம விருதை வழங்கினார். குடியரசு தலைவரிடம் விருது பெறுவதற்கு முன் மஞ்சம்மா ஜோகதி அவருக்கு தன் புடவையின் முந்தானையில் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து புன்னகையுடன் விருதைப் பெற்றார். திருநங்கை மஞ்சம்மா ஜோகதியின் இந்த ஆசி, அதிருஷ்டத்தை தரும் என நம்பப்படுவதால் குடியரசுத் தலைவரும் மகிழ்ச்சியோடு தலை வணங்கினார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மஞ்சுநாத ஷெட்டி பிறந்தார். 15-வது வயதை அடைந்தபோது தன்னை ஒரு பெண்ணாக உணர தொடங்கினார். உறவினர்கள் கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த இவரது பெற்றோர், ஹொசபேட்டையில் உள்ள ஹூலிகேயம்மா கோயிலுக்கு கொண்டுசென்று, ஜோகப்பாதீட்சை என்ற சடங்கின் வாயிலாக தெய்வத்துக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். இதன் மூலம் மஞ்சம்மா ஆன இவரை கோயிலிலே விட்டுவிட்டு பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர்.

மீண்டும் வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் மஞ்சம்மா ஜோகதி சில மாதங்கள் கோயிலிலே காலம் கழித்துள்ளார். அங்கு பாலியல் தொல்லை அதிகரித்ததால் கோயிலில் இருந்து வெளியேறி சாலைகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் மஞ்சம்மாவுக்கு நாட்டுப்புற கலைஞர் காலவ்வா ஜோகதியின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் 3 ஆண்டுகள் ஜோகப்பா நிருத்யா என்ற நாட்டுப்புற நடனத்தை மஞ்சம்மா கற்றார்.

காலவ்வாவின் மரணத்துக்கு பின் அவரது குழுவை மஞ்சம்மா ஜோகதி தலைமையேற்று நடத்தினார். இதனால் ஜோகப்பா நிருத்யா நடனம் மிகவும் பிரபலமானது. இந்த நடனத்தின் வாயிலாக கன்னட பக்தி பாடல்கள், எல்லம்மா உள்ளிட்ட பெண் தெய்வங்களின் பாசுரங்கள் ஆகியவற்றுக்கு நடன வடிவம் அளித்து மாவட்டந்தோறும் அரங்கேற்றம் செய்தார். 

இவரது கலைசேவையை பாராட்டி கர்நாடக அரசு 2006-ல் 'கர்நாடக நாட்டுப்புற அகாடமி விருது'ம், 2010-ல் 'கன்னட ராஜ்யோத்சவா விருது'ம் வழங்கியது. மேலும் 2019-ல் கர்நாடக நாட்டுப்புற அகாடமியின் தலைவராகவும் நியமித்தது. இதன் மூலம் அந்த பதவியை வகித்த முதல் திருநங்கை என்ற பெருமையை மஞ்சம்மா ஜோகதி பெற்றார். இந்நிலையில் மஞ்சம்மா ஜோகதியில் 40 ஆண்டுகால கலை பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு 2021-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்