Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழை நின்று 2 நாட்கள் ஆன பிறகும் சென்னையில் 70 தெருக்களில் தண்ணீர் இன்னமும் தேங்கியுள்ளது

நவம்பர் 14, 2021 11:48

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னையில் இந்த வார தொடக்கத்தில் மிக பலத்த மழை பெய்தது. இயல்பை விட 20 செ.மீ. மேல் மழை பெய்ததால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. கடந்த புதன், வியாழன் கிழமைகளில் சென்னை மாநகரில் அனைத்து தெருக்களும் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் 540 தெருக்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கடந்த வியாழக்கிழமை காற்றழுத்த மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்தபோது நிவாரணப்பணிகள் தொடங்கின. தெருக்களில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நேற்றுவரை 470 தெருக்களில் தேங்கியிருந்த தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் சுமார் 70 தெருக்களில் மட்டும் தண்ணீர் தேங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தெருக்களில் தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொளத்தூர் பகுதியில் ஜவகர் நகர், ஆழ்வார்பேட்டை பகுதியில் சீத்தாம்மாள் காலனி, தி.நகரில் சுப்பிரமணியம் நகர் ஆகிய 3 இடங்களில் மட்டும்தான் மிக மிக அதிகளவு தண்ணீர் தேக்கம் காணப்படுகிறது. இதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த 3 இடங்களிலும் அதிக கவனம் செலுத்தி தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மழை நின்று 2 நாட்கள் ஆனபிறகும் சென்னையில் 70 தெருக்களில் தண்ணீர் தேக்கம் நீடிப்பதால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சில இடங்களில் ஒரு வாரமாக மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. இதை முழுமையாக சரி செய்ய அனைத்து துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

இன்று (ஞாயிறு) இரவுக்குள் சென்னையில் அனைத்து தெருக்களும் முந்தைய நிலைமைக்கு கொண்டுவர அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இன்று இரவுக்குள் 70 தெருக்களில் உள்ள தண்ணீரும் வெளியேற்றப்பட்டுவிடும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் 70 தெருக்களில் தண்ணீர் இன்னமும் தேங்கியுள்ளது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தத்தளிப்பவர்களுக்காக சென்னை மாநகராட்சி 91 இடங்களில் நிவாரண முகாம்களை ஏற்படுத்தி இருந்தது. அதில் 70 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

இன்று காலை நிலவரப்படி இந்த 70 முகாம்களிலும் 3,942 பேர் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு 3 நேரம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
மழை தண்ணீர் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்