Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து

நவம்பர் 24, 2021 03:00

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். 

அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. 

மேலும் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார். 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என உத்தரவிட்டுள்ளது. வேதா நிலையத்தை 3 வாரங்களில் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு எனவும் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்