Sunday, 6th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை: கர்நாடகா அரசு முடிவு

நவம்பர் 28, 2021 10:36

பெங்களூரு: கொரோனா தாக்கம் அதிகரிப்பு மற்றும் வைரஸின் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக, கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த கர்நாடகா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளின் பரிசோதனை தீவிரப்படுத்தவும், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கையை கட்டாயமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுக்காதவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுவதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை விதிக்கவும், அரசு அலுவலகங்கள், மால்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் நூலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து மாநிலத்திற்குள் நுழைபவர்களுக்கு கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.கடந்த 16 நாட்களில் கேரளாவில் இருந்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் (இரண்டாம் முறை) கட்டாய ஆர்டிபிசிஆர் சோதனை.

சோதனையில் நெகட்டிவ் அறிக்கை பெற்ற விடுதிகளில் உள்ள மாணவர்கள் முதல் அறிக்கைக்குப் பிறகு 7 வது நாளில் ஆர்டிபிசிஆர் சோதனையை மீண்டும் செய்ய வேண்டும்.மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதி தீவிர சோதனை.

விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளின் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பரிசோதனையில் கோவிட் தொற்று உள்ளவர்கள் நகரங்களுக்குள் நுழைய முடியாது.விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டவர்களில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.பள்ளி, கல்லூரிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக தடை. என தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது கர்நாடக அரசு.

பூஸ்டர் டோஸுக்கு வலியுறுத்தல்

இது குறித்து வருவாய்துறை அமைச்சர் அசோக் கூறியதாவது:மாநிலத்தில் கோவிட்- மூன்றாவது அலையைத் தடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை வழங்க அரசு ஆர்வமாக உள்ளது. உயர்மட்டக் குழு இது குறித்து விவாதித்தது.

பூஸ்டர் டோஸ் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம், குறிப்பாக முன் கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டும். மாநிலத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு சாதகமாக பதிலளிக்கும் என நம்புகிறோம் என்றார்.

தலைப்புச்செய்திகள்