Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடு, தண்ணீர் வரியை குறைக்க வேண்டும் அ.தி.மு.க. வலியுறுத்தல்

மே 02, 2019 11:05

புதுச்சேரி: அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது ஜனநாயக படுகொலை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து கண்டிக்கத்தக்கது. அவர் தமிழக அரசு, அ.தி.மு.க.வை பற்றி பேச எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் இது எங்கள் உள்கட்சி பிரச்சினை.

புதுவையில் கவர்னர், முதல்–அமைச்சர் ஆகியோரின் மலிவு விளம்பரம் காரணமாக மரபுகள், மாண்புகள் மதிக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர். யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பினை அ.தி.மு.க. வரவேற்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டமன்ற நடவடிக்கைகளில் கவர்னர் குறுக்கிடுவது தவறானது. இதனால் 3 ஆண்டு காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்காக கவர்னரும், முதல்–அமைச்சரும் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

புதுவையில் தண்ணீர் வரி, வீட்டுவரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை கவர்னர்தான் உயர்த்தினார் என்று முதல்–அமைச்சர் கூறினார். ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகாவது அதை முதல்–அமைச்சர் குறைக்கவேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கவேண்டும்.

முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்து காத்திருக்கும் 24 ஆயிரம் பேருக்கும் அதை வழங்கவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் 185 தொழிற்சாலைகள் மூடப்பட்டு 40 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர். அவர்களது நிலை குறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

தலைப்புச்செய்திகள்