Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய பிரதமர்: அகிலேஷ் யாதவ் ஆசை

மே 02, 2019 11:16

லக்னோ : இந்தியாவிற்கு புதிதாக ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் விருப்பம் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கூறி உள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அகிலேஷ் அளித்த பேட்டியில், பா.ஜ., ஓட்டுக்களை பிரிக்க பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதாக பிரியங்கா கூறுகிறார். ஆனால் காங்., எங்கும் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை. 

இந்தியாவிற்கு புதிய பிரதமர் வர வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் விளக்கம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பிரதமர் குறித்து கட்சி முடிவு செய்யும். அது என் அப்பா முலாயம் சிங் யாதவாக கூட இருக்கலாம்  அவர் பிரதமரானால் நன்றாக தான் இருக்கும். ஆனால் அவர் பிரதமர் போட்டியில் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

பா.ஜ.,வுக்கும், காங்.,க்கும் எந்த வேறுபாடும் இல்லை. பா.ஜ., பலனடைய வேண்டும் என்றே காங் விரும்புகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் பிற அமைப்புக்களை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்துவதை காங்., இடம் இருந்து தான் பா.ஜ., கற்றுக் கொண்டுள்ளது. 

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி, பா.ஜ.,வின் 'பி டீம்' என்று காங்.,ம், எங்கள் கூட்டணியை பாஜ., கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் கூறுவதையும் ஏற்க முடியாது. எங்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் அரசியல் கட்சிகள். எங்களின் கூட்டணி உ.பி.,யில் ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பா.ஜ.,வின் மோசமான அரசியலை எங்கள் கூட்டணி தடுத்து நிறுத்தும்.

லோக்சபாவில் சமாஜ்வாதி எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைக்கிறேன். பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் நாங்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறனே். புதிய அரசு அமைப்பதில் உ.பி.,யின் பங்கு இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. எல்லையிலும், நக்சல் பாதிப்பு பகுதிகளிலும் நமது வீரர்கள் செத்து மடிகிறார்கள். ராணுவ வீரர்கள் பற்றி பேசும் பா.ஜ., தினமும் ஒரு வீரர் உயிரிழப்பதை தடுக்க என்ன செய்தது? என்றார்.

தலைப்புச்செய்திகள்