Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை: தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்

நவம்பர் 29, 2021 01:14

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் வைரஸ் சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது ஒன்றிரண்டு நாடுகளுக்கு பரவ தொடங்கி உள்ளது.

 இதன் வீரியம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆய்வகங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிந்த பிறகு,  மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்