Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ 50 கோடி மோசடி; வேலூரில் அரசு பள்ளி ஆசிரியை கைது

டிசம்பர் 03, 2021 10:47

வேலுார்: வேலுாரில், 50 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், வேலுார் கொணவட்டத்தை சேரந்தவர் மகேஸ்வரி, 55. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கணவர் தர்மலிங்கம், 60. ஒய்வு பெற்ற எஸ்.ஐ., இருவரும் சேர்ந்து 2018 ம் ஆண்டு வேலுாரில் கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கினர். இதில் முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறினர்.

இதை நம்பி ஆசிரியைகள் ராணிப்பேட்டையை சேர்ந்த ஜான்சிராணி 2.50 கோடி, வேலுாரில், மலர் 45 லட்சம் ரூபாய், தமிழ் செல்வி, 2. 50 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இதே போல தமிழகம் முழுவதுமிருந்து ஆசிரியர்கள், பொது மக்கள் பணத்தை இவரிடம் முதலீடு செய்தனர்.பல மாதங்கள் ஆகியும் வட்டி தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரி, தர்மலிங்கம் தம்பதியினர் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததும், அந்த பணத்தில் அவர்களது மகள்களான கீர்த்தனா, பூபானா ஆகியோர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியதும் தெரியவந்தது.இதையடுத்து மகேஸ்வரி, தர்மலிங்கம் ஆகியோர் மீது வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையறிந்த அவர்கள் தலைமறைவாயினர். இவர்களை கண்டுபிடித்து கைது செய்து பணத்தை மீட்டு தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் வேலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வேலுாரில் பதுங்கியிருந்த மகேஸ்வரியை போலீசார் இன்று கைது செய்து மகளிர்சிறையில் அடைத்தனர். தலைமறைவான அவரது கணவர் தர்மலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்