Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கமல்

டிசம்பர் 04, 2021 12:03

சென்னை : கொரோனா தொற்றிலிருந்து இருந்த மீண்ட நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இன்று(டிச., 4) வீடு திரும்புகிறார்.

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் கதர் ஆடை தொடர்பான நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். அதன்பின் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட கடந்த நவ., 22ம் தேதி சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். கமல் நலமாக இருப்பதாக மருத்துவமனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகினர் பலரும் கமல் விரைவில் குணமாகி வர வேண்டும் என வாழ்த்தினர். சில தினங்களுக்கு முன் நோய் தொற்றிலிருந்து கமல் குணமானார். இருப்பினும் மருத்துவமனையில் ஓரிரு நாள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார்.

கமல் டிஸ்சார்ஜ் குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை : ‛‛கொரோனா நோய் தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வழக்கமான அவரது பணிகளை தொடரலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் நன்றி

கமல் வெளியிட்ட அறிக்கை : மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல் கவனித்து சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நன்றி. நான் விரைந்து நலம் பெற் வேண்டுமென வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நண்பர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர், விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழு, பிக்பாஸ் குழுவினருக்கு நன்றி.

நான் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்தும், அன்னதானம், ரத்ததானம் செய்த ரசிகர்கள், மக்கள் நீதி மைய உறுப்பினர்கள், என்னை என் வீட்டில் ஒருவனாக கருதி எனக்காக கண்கலங்கிய தமிழக மக்களுக்கும் என் நன்றிகள். பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டா என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னை கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு, கலங்கிய கண்களுக்கு நன்றி. உன்னத உறவுகளை தந்த வாழ்க்கைக்கு நன்றி.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்