Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுற்றுலா ரயில் இயக்க தனியாருக்கு தெற்கு ரயில்வே அனுமதி

டிசம்பர் 06, 2021 10:32

சென்னை: இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் நோக்கில், 'பாரத் கவுரவ்' சுற்றுலா ரயில் இயக்க, தனியார் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க, முதலில் பதிவு பெற்ற மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரயில்களை இயக்க, 'பாரத் கவுரவ்' திட்டம் துவங்கப்பட்டது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. 'இத்திட்டத்தில், ரயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உதவும். ரயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணி' என ரயில்வே வாரியம் அறிவித்தது. ரயிலில் பயணியர் கட்டணங்களை ஒப்பந்த நிறுவனமே முடிவு செய்யலாம். அசாதாரண விலை நிர்ணயிக்காதபடி, ரயில்வே கண்காணிக்கும்.

இந்த ரயில் முன்பதிவுக்கு, ஒப்பந்ததாரர் முதலில் 1 லட்சம் ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்ட பின், பாதுகாப்பு வைப்புத் தொகையாக, ஒரு பெட்டிக்கு 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்ததும், இந்த தொகை ஒப்பந்ததாரருக்கு திருப்பி வழங்கப்படும்.சுற்றுலா ரயிலை குத்தகைக்கு எடுத்து இயக்க விரும்புவோர், தெற்கு ரயில்வே அலுவலகத்தை, 90031 60955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், bharat gauravtrainssr@gmail.com முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ் சுற்றுலா ரயில் இயக்க தனியார் நிறுவனம் ஒன்று, தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் விண்ணப்பித்து இருந்தது. அந்த நிறுவனத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பாரத் கவுரவ் திட்டத்தை இயக்க முதலில் பதிவு பெற்ற மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்