Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமான நிலையங்களில் சிக்கிய 9½ கிலோ தங்கம்- 9 பேர் அதிரடி கைது

டிசம்பர் 07, 2021 11:50

திருவனந்தபுரம்: வெளிநாடுகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு விமான நிலையங்கள் வழியாக அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதற்கான சோதனை நடவடிக்கையில் பல்வேறு பிரிவுகளாக அதிகாரிகள் ஈடுபட்டனர். சனிக்கிழமை இரவு தொடங்கிய அதிகாரிகளின் சோதனை நேற்று காலை வரை தொடர்ந்தது.

இதில் மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடத்தல் தங்கம் சிக்கியது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதிகாரிகளின் சோதனையில் மலப்புரம் காவனுர் அருகே கடத்தல் தங்கத்தை உருக்க அமைக்கப்பட்ட நிறுவனத்தையும் கண்டுபிடித்தனர். அங்கிருந்து ரூ. 2.90 கோடி மதிப்பிலான 5.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட பைசல் ரகுமானின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 850 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று சவுதி அரேபியாவில் இருந்து ஒரு விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் பசை வடிவில் 633 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்த கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும். அதை பறிமுதல் செய்தனர். இதுபோல் ரியாத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஒருவர் சுமார் 850 கிராம் தங்கத்தை கடத்தியது தெரிய வந்தது. அதிகாரிகள் அதை கைப்பற்றினர்.

நேற்று ஒரே நாளில் கேரளாவில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் 2 விமான பயணிகளிடம் 9.75 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.4.75 கோடி ஆகும். இது தொடர்பாக பைசல் அகமது , முகமுது அஸ்ரப், முகமது முஸ்தபா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்க கடத்தல் தொடர்பாக மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். இதில் மேலம் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கருதுகிறோம் என்று கூறினர்.

தலைப்புச்செய்திகள்