Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விழுப்புரம் அருகே தாய்-மகளை கொன்று நகை பறிப்பு: கொள்ளை கும்பல் அட்டூழியம்

டிசம்பர் 07, 2021 11:52

கண்டமங்கலம்: விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் கலித்திராம்பட்டு கண்டச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சரோஜா (வயது 75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தட்சிணாமூர்த்தி இறந்து போனார். எனவே சரோஜாவுடன் அவரது மூத்த மகள் பூங்காவனம் (55) வசித்து வந்தார். இவர்கள் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று மாலை வேலை முடிந்து வந்த அவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கினர். இன்று அதிகாலை கொள்ளை கும்பல் அங்கு சென்றனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த தாய்-மகள் 2 பேரையும் சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் சரோஜா, பூங்காவனம் ஆகியோர் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அதன் பின்னர் அந்த கொள்ளை கும்பல் தாய்- மகளின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர். அதன் பின்னர் இந்த கொள்ளை கும்பல் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றது. அங்கு தங்கி வேலை பார்த்த கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை சேர்ந்த நாகலிங்கம்-அஞ்சம்மாள் தம்பதியை உருட்டுக் கட்டையால் தாக்கினர். இதில் அவர்கள் அலறி துடித்தவாறு கீழே சாய்ந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

படுகாயம் அடைந்த தம்பதியினர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட தாய்-மகள் வசித்த வீட்டுக்கு உறவினர் ஒருவர் இன்று காலை சென்றார். அப்போது அங்கு சரோஜா, பூங்காவனம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீப்போல பரவியது. இதனால் கிராம மக்கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

என்றாலும் தாய்-மகளை கொன்ற கொள்ளை கும்பல் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? அவர்கள் எங்கு தப்பி சென்றனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்- இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள். கொள்ளை நடந்த இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்